Latest Videos

கடவுள் வாழ்த்து குறள்-3 -மலர்மிசை ஏகினான்



மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.



கலைஞர் உரை:
மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்.

மு.வ உரை:
அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்.

சாலமன் பாப்பையா உரை:
மனமாகிய மலர்மீது சென்று இருப்பவனாகிய கடவுளின் சிறந்த திருவடிகளை எப்போதும் நினைப்பவர் இப்பூமியில் நெடுங்காலம் வாழ்வர்.

பரிமேலழகர் உரை:
மலர்மிசை ஏகினான் மாண்அடி சேர்ந்தார் - மலரின் கண்ணே சென்றவனது மாட்சிமைப்பட்ட அடிகளைச் சேர்ந்தார்; நிலமிசை நீடுவாழ்வார் - எல்லா உலகிற்கும் மேலாய வீட்டு உலகின்கண் அழிவின்றி வாழ்வார். (அன்பான் நினைவாரது உள்ளக் கமலத்தின்கண் அவர் நினைந்த வடிவோடு விரைந்து சேறலின் 'ஏகினான்' என இறந்த காலத்தால் கூறினார்; என்னை? "வாராக் காலத்தும் நிகழும் காலத்தும் ஓராங்கு வரூஉம் வினைச் சொற் கிளவி இறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல் விரைந்த பொருள் என்மனார் புலவர்" (தொல், சொல், வினை, 44) என்பது ஓத்தாகலின். இதனைப் 'பூமேல் நடந்தான்' என்பதோர் பெயர்பற்றிப் பிறிதோர் கடவுட்கு ஏற்றுவாரும் உளர். சேர்தல் - இடைவிடாது நினைத்தல்).

மணக்குடவர் உரை:
மலரின்மேல் நடந்தானது மாட்சிமைப்பட்ட திருவடியைச் சேர்ந்தவரன்றே, நிலத்தின்மேல் நெடுங்காலம் வாழ்வார். 'நிலம்' என்று பொதுப்படக் கூறியவதனான் இவ்வுலகின் கண்ணும் மேலுலகின்கண்ணுமென்று கொள்ளப்படும். தொழுதாற் பயனென்னையென்றாற்கு, போகநுகர்தலும் வீடுபெறலுமென்று கூறுவார் முற்படப் போகநுகர்வாரென்று கூறினர்.
வீடியோ :


Translation:

His feet, 'Who o'er the full-blown flower hath past,' who gain In bliss long time shall dwell above this earthly plain.

Explanation:
They who are united to the glorious feet of Him who occupies swiftly the flower of the mind, shall flourish in the highest of worlds (heaven).

கடவுள் வாழ்த்து- கற்றதனால்

கடவுள் வாழ்த்து- கற்றதனால்
Thiruvaluvar
குறள் 2:


கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

கலைஞர் உரை:
தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றுஇருந்தாலும் அதனால் என்ன பயன்?. ஒன்றுமில்லை.


மு.வ உரை:
தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?.


சாலமன் பாப்பையா உரை:
தூய அறிவு வடிவானவனின் திருவடிகளை வணங்காதவர், படித்ததனால் பெற்ற பயன்தான் என்ன?.


பரிமேலழகர் உரை:
கற்றதனால் ஆய பயன் என் - எல்லா நூல்களையும் கற்றவர்க்கு அக்கல்வி அறிவான் ஆய பயன் யாது?; வால் அறிவன் நல் தாள் தொழாஅர் எனின் - மெய்யுணர்வினை உடையானது நல்ல தாள்களைத் தொழாராயின்? (எவன் என்னும் வினாப்பெயர் என் என்று ஆய், ஈண்டு இன்மை குறித்து நின்றது. 'கொல்' என்பது அசைநிலை. பிறவிப் பிணிக்கு மருந்து ஆகலின் 'நற்றாள்' என்றார். ஆகம அறிவிற்குப் பயன் அவன் தாளைத் தொழுது பிறவியறுத்தல் என்பது இதனான் கூறப்பட்டது.


மணக்குடவர் உரை:
மேற்கூறிய வெழுத்தினா னாகிய சொற்க ளெல்லாங் கற்றதனானாகிய பயன் வேறியாது? விளங்கின வறிவினை யுடையவன் திருவடியைத் தொழாராயின். சொல்லினானே பொருளறியப்படுமாதலான் அதனைக் கற்கவே மெய்யுணர்ந்து வீடுபெறலாகும். மீண்டும் வணக்கம் கூறியது எற்றுக்கென்றாற்கு, இஃது அதனாற் பயனிது வென்பதூஉம், வேறுவேறு பயனில்லையென்பதூஉம் கூறிற்று. `கற்பக் கழிமட மஃகும் என்றாருமுளர்.


Translation:
No fruit have men of all their studied lore, Save they the 'Purely Wise One's'feet adore.


Explanation:
What Profit have those derived from learning, who worship not the good feet of Him who is possessed of pure knowledge ?.
 வீடியோ வடிவில்


அகர முதல - கடவுள் வாழ்த்து THIRUKURAL VIDEOS

அகர முதல - கடவுள் வாழ்த்து

Thirukural

Thirukural  is Best Advise in Humans..Use the One Kural you success in the life
AGARA MUTHALA - KADAVUL VAALTHU 
குறள் 1:


அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

கலைஞர் உரை:
அகர எழுத்துகளுக்கு முதன்மை, ஆதிபகவன், உலகில் வாழும்
உயிர்களுக்கு முதன்மை.

மு.வ உரை:
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.

சாலமன் பாப்பையா உரை:
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.

பரிமேலழகர் உரை:
அஃதாவது, கவி தான் வழிபடு கடவுளையாதல் எடுத்துக் கொண்ட பொருட்கு ஏற்புடைக் கடவுளையாதல் வாழ்த்துதல். அவற்றுள் இவ்வாழ்த்து ஏற்புடைக் கடவுளை என அறிக; என்னை? சத்துவம் முதலிய குணங்களான் மூன்று ஆகிய உறுதிப்பொருட்கு அவற்றான் மூவராகிய முதற் கடவுளோடு இயைபு உண்டு ஆகலான். அம்மூன்று பொருளையும் கூறுதலுற்றார்க்கு அம்மூவரையும் வாழ்த்துதல் முறைமை ஆகலின் , இவ்வாழ்த்து அம்மூவர்க்கும் பொதுப்படக் கூறினார் என உணர்க. 
விளக்கம்: எழுத்து எல்லாம் அகரம் முதல - எழுத்துக்கள் எல்லாம் அகரம் ஆகிய முதலை உடையன; உலகு ஆதிபகவன் முதற்று - அது போல உலகம் ஆதிபகவன் ஆகிய முதலை உடைத்து. (இது தலைமை பற்றி வந்த எடுத்துக்காட்டு உவமை. அகரத்திற்குத் தலைமை விகாரத்தான் அன்றி நாதமாத்திரை ஆகிய இயல்பாற் பிறத்தலானும், ஆதிபகவற்குத் தலைமை செயற்கை உணர்வான் அன்றி இயற்கை உணர்வான் முற்றும் உணர்தலானும் கொள்க.தமிழ் எழுத்திற்கே அன்றி வட எழுத்திற்கும் முதலாதல் நோக்கி, 'எழுத்து' எல்லாம் என்றார். ஆதிபகவன் என்னும் இரு பெயரொட்டுப் பண்புத்தொகை வடநூல் முடிபு. 'உலகு' என்றது ஈண்டு உயிர்கள் மேல் நின்றது. காணப்பட்ட உலகத்தால் காணப்படாத கடவுட்கு உண்மை கூற வேண்டுதலின், 'ஆதிபகவன் முதற்றே' என உலகின் மேல் வைத்துக் கூறினார்; கூறினாரேனும், உலகிற்கு முதல் ஆதிபகவன் என்பது கருத்தாகக் கொள்க. ஏகாரம் - தேற்றத்தின்கண் வந்தது. இப்பாட்டான் முதற்கடவுளது உண்மை கூறப்பட்டது.)

மணக்குடவர் உரை:

எழுத்துக்களெல்லாம் அகரமாகிய வெழுத்தைத் தமக்கு முதலாக வுடையன. அவ்வண்ணமே உலகம் ஆதியாகிய பகவனைத் தனக்கு முதலாக வுடைத்து.

Translation:
A, as its first of letters, every speech maintains; The "Primal Deity" is first through all the world's domains.

Explanation:
As all letters have the letter A for their first, so the world has the eternal
God for its first.
 வீடியோ வடிவில்